படிக்கட்டில் நிக்காதீங்க என்று சொன்ன பேருந்து நடத்துநருக்கு கத்திக்குத்து

1 mins read
a438463e-6653-4459-ba92-976e307f0613
ஹர்ஷ் சின்ஹா தான் வைத்திருந்த கத்தியை உருவி பேருந்து நடத்துநர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தினார். - படங்கள்: இந்திய ஊடகம்

பெங்களூர்: பேருந்துப் படிக்கட்டில் நிற்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கிய பேருந்து நடத்துநரைப் பயணி ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (அக்.1) இரவு 7 மணிக்கு அரசு பேருந்தில் ஏறிய ஹர்ஷ் சின்ஹா என்ற 25 வயது இளைஞர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதனைக் கவனித்த பேருந்து நடத்துநரான 45 வயது யோகேஷ், படிக்கட்டில் நிற்காமல் உள்ளே வரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் பேருந்து நடத்துநர் சொல்வதைக் கேட்காமல் அவருடன் அந்த இளையர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியை உருவி பேருந்து நடத்துநர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தியுள்ளார். மேலும் பேருந்தில் உள்ள மற்ற பயணிகளையும் அவர் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். கத்தியைக் காட்டி மிரட்டி அனைவரையும் பேருந்தில் இருந்து கீழே இறங்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

பேருந்து ஓட்டுநர் உடனே பேருந்தின் தானியக்க கதவை பூட்டிவிட்டு வெளியே குதித்த பின்னர் உள்ளே மாட்டிக்கொண்ட அந்த இளையர் கோடரியால் பேருந்தைச் சேதப்படுத்தியுள்ளார். ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள வைதேகி சர்க்கிள் என்ற இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த இளையரைக் கைது செய்தனர்.

மேலும் கத்தியால் தாக்கப்பட்ட பேருந்து நடத்துநருக்கு ரத்தம் வழிந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காவல்துறை விசாரணையில் இளையர் ஹர்ஸ் சின்ஹா, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் தொலைபேசி அழைப்பு நிலையத்தில் வேலை பார்ப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்