இசை நிகழ்ச்சிக் கூட்டத்திற்குள் பேருந்து புகுந்து ஐவர் மரணம்

இசை நிகழ்ச்சிக் கூட்டத்திற்குள் பேருந்து புகுந்து ஐவர் மரணம்

2 mins read
e549d7d3-cf41-4384-8d07-6de5b2620682
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை உள்ளூர்வாசிகள் அடித்து நொறுக்கினர். - படம்: இடிவி பாரத்
Google News Preferred Icon

பாட்னா: சாலையோரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோர்மீது பேருந்து மோதியதில் ஐவர் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமுற்றனர்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு 10.45 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது.

அங்கு மேற்கு சம்பாரன் மாவட்டம், லவுரியா நகருக்கு அருகே உள்ள ஒரு சிற்றூரில் அந்த இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.

தேவேந்திர துபே என்பவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. அதனையடுத்து, குழந்தை பிறந்த ஆறாம் நாளில் நடத்தப்படும் ‘சாத்தியார்’ எனும் சடங்கை ஒட்டி, சத்ருகன் துபே என்பவரது வீட்டில் இசை நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்பட்டது.

அப்போது, பெத்தியா - லவுரியா சாலையில் சென்ற பேருந்து தறிகெட்டு ஓடி, கூட்டத்திற்குள் பாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதில் குழந்தையின் தந்தை தேவேந்திர துபே உட்பட ஐவர் உயிரிழந்தனர்.

எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனத்தின்மீது மோதுவதைத் தவிர்க்க பேருந்து ஓட்டுநர் முயன்றதாகக் கூறப்பட்டது. ஆனாலும், அதன்மீது மோதிய பேருந்து, பின்னர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் திரண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள், அந்தப் பேருந்தையும் சரக்கு வாகனத்தையும் அடித்து நொறுக்கியதாக ‘இடிவி பாரத்’ செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர், அதனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாகவும் சற்றுத் தொலைவில் அதனை நிறுத்திவிட்டுத் தப்பியோடிவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. அப்பேருந்தைக் காவல்துறை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்துயர நிகழ்வு ஊரார் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், சாலையோரத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்