தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடையர்மீது மோதிவிட்டுத் தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் ரயில் மோதி உயிரிழப்பு

1 mins read
c6b6fa2b-4a7e-45a7-ac0e-f6cacaf6de5e
தண்டவாளம் வழியாகத் தப்பியோடியவர் ரயில் வந்ததைக் கவனிக்கத் தவறினார். - மாதிரிப்படம்: பிக்சாபே

கண்ணூர்: நடையர்மீது மோதியபின் பேருந்திலிருந்து குதித்துத் தப்பியோடிய அதன் ஓட்டுநர் ரயில் மோதி மாண்டுபோனார்.

இச்சம்பவம் கேரள மாநிலம், தலசேரி அருகேயுள்ள பெட்டிப்பாலத்தில் சனிக்கிழமை நிகழ்ந்தது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டிச் சென்ற கே. ஜீஜித் என்ற அந்த ஆடவர், பொதுமக்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் பேருந்திலிருந்து குதித்து ஓட்டம் பிடித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

“சனிக்கிழமை மாலை ஜீஜித் ஓட்டிச் சென்ற தனியார் பேருந்து நடையர் ஒருவர்மீது மோதிவிட்டது. அந்த நடையர் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதால் ஜீஜித் பதற்றமடைந்தார். எங்கே பொதுமக்கள் தன்னைப் பிடித்து அடித்து உதைத்துவிடுவார்களோ என்று அஞ்சி, பேருந்திலிருந்து குதித்து, ரயில் தண்டவாளம் வழியாக ஓட்டம் பிடித்தார். அதே தண்டவாளத்தில் ரயில் வந்ததை அவர் கவனிக்கத் தவறியதால் ரயில் மோதி உயிரிழந்தார்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் விளக்கினார்.

பேருந்து மோதியதால் காயமடைந்த நடையர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறியப்படுகிறது என்று ‘மனோரமா’ செய்தி தெரிவித்தது.

இதனிடையே, ரயில் மோதியதால் மாண்டுபோன ஜீஜித்தின் உடல் தலசேரி அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்