காற்றின் தரத்தைக் கண்டறியும் வசதியுடன் கூடிய பேருந்துச் சேவை அறிமுகம்

காற்றின் தரத்தைக் கண்டறியும் வசதியுடன் கூடிய பேருந்துச் சேவை அறிமுகம்

படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

15 Mar 2026 - 2:48 pm

2 mins read

விஜயவாடா: இந்தியாவில் காற்றின் தரத்தைக் கண்டறியும் வசதியுடன் கூடிய பேருந்துச் சேவை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தொடங்கப்பட்டது.

இதன் மூலம், நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் அமரும் பகுதிக்குள் (கேபின்) உள்ள காற்று மாசுபாடு குறித்து உடனுக்குடன் விவரங்களை அறிய முடியும்.

நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளின் உள்ளே, பயணிகளுக்கான பகுதியில், காற்று மாசுபாடு அளவானது, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த வரம்புகளைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ‘இன்டர்சிட்டி’ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் முதல் காற்றுத்தரக் குறியீடு கண்டறியும் வசதியோடு கூடிய முதல் இன்டர்சிட்டி பேருந்துச் சேவையை, விஜயவாடா நகரப் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஷெரீன் பேகம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், இத்தகைய சேவையானது இந்தியாவின் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று விவரித்தார்.

பயணிகளின் உடல்நலனைப் பாதுகாக்க, குறிப்பாக நீண்ட பயணங்களின் போது, ​​பேருந்துகளுக்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துவதே இப்புதிய ஏற்பாட்டின் நோக்கம் என்றார் அவர்.

பயணிகளுக்கான ‘கேபின்’ பகுதியில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் காற்றுத்தரக் குறியீட்டு வசதியுடன் கூடிய ‘ஸ்மார்ட்’ பேருந்துத் தொழில்நுட்பத்தை இன்டர்சிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்மூலம், பல இந்திய நகரங்களில் வெளிப்புறக் காற்றைவிட, பேருந்து பயணிகளுக்குத் தரமான காற்று கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறித்த விவரங்கள் பயணத்தின்போது பேருந்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள திரைகளிலும் கைப்பேசி செயலியிலும் காட்டப்படும்.

பயணங்களின்போது பயணிகள் சுத்தமான காற்றை சுவாசிப்பதை உறுதி செய்வதே இப்புதிய சேவையின் நோக்கம் என இன்டர்சிட்டியைச் சேர்ந்த மணீஷ் ரதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்