லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் லாரியும் தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறை ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை விடியற்காலையில் அலிகார் மாவட்டத்தின் தப்பல் பகுதி வழியாக வாகனங்கள் சென்றபோது நடந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அந்தப் பேருந்து டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் அஸாம்கார்க் என்னும் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. மூடுபனி காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து காரணமாக யமுனா விரைவுச்சாலையில் சில மணிநேரம் முடங்கிக்கிடந்த போக்குவரத்து மீண்டும் சீராகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
உ.பி. விரைவுச்சாலைகளில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அதிவேகமாக வந்துகொண்டிருந்த டெம்போ வாகனம் ஒன்று, முன்னே சென்றுகொண்டிருந்த வாகனத்தைத் தாண்டிச் செல்ல முயன்ற அந்த வாகனத்தின் மீது மோதியது.
அந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியில் தூக்கியெறியப்பட்டனர். அதிகாலை 2 மணிக்கு நடந்த அந்த விபத்தில் புதிதாகத் திருமணமான மணமக்கள், வாகன ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரைத் தவிர்த்து மற்ற ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.