புதுச்சேரி: இந்தியாவின் 16 மாநிலங்களில் போலி மருந்துகளை விற்பனை செய்ததாக, சரணடைந்த தொழிலிபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த போலி மருந்துகளை புதுச்சேரியில் உள்ள தமது தொழிற்சாலையில் தயாரித்ததாகவும் அவர் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மாத்திரைகள் விற்கப்படுவதாக சிபிசிஐடி காவல்துறைக்கு புகார்கள் சென்றன.
அதிகாரிகள் விசாரணை நடத்தி இரண்டு ஆடவர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் வசித்த திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் மூன்று இடங்களில் போலி மாத்திரை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தியது தெரியவரவே மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அவரது தொழிற்சாலையில் சோதனை நடத்தினர்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி மாத்திரைகள், மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்களைக் கைப்பற்றிய அதிகாரிகள் அந்தத் தொழிற்சாலையை முடக்கி, ‘சீல்’ வைத்தனர். போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கிய கட்டடம் புதுச்சேரி அரசியல் பிரமுகர்களுக்குச் சொந்தமானது என்பதும் அதிலிருந்து அதிக வாடகை வருவதால் போலி மருந்து தயாரிப்பை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராஜா மற்றும் அரியூரைச் சேர்ந்த விவேக் ஆகியோர் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) சரணடைந்தனர். அவர்களை காவலில் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால் அனுமதி வழங்கினார்.
விசாரணையின்போது காவல்துறையினரிடம் ராஜா அளித்த வாக்குமூலத்தில், “கடந்த பத்து ஆண்டுகளாக மருந்து தொழில் செய்து வந்தேன். அதில் லாபம் இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக போலி மருந்து விற்றதில் அதிக லாபம் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
“பின்னர், மருந்தியல் படித்த நண்பர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, டெல்லியைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் மருந்துகளை புதுச்சேரியில் போலியாகத் தயாரித்து அவற்றை உத்தரப் பிரதேசம், அசாம், ஆந்திரா உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு விநியோகம் செய்தேன். இந்த மோசடிக்குப் பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் சில ஊழியர்களும் ஏஜெண்டுகளும் உதவி செய்தனர்,” என்று கூறினார். விசாரணை தொடர்கிறது.

