மும்பை: பிரபல இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.
அவருக்கு வயது 86. அவர் கெளரவத் தலைவராகப் பொறுப்பு வகித்த டாடா குழுமம், புதன்கிழமையன்று (அக்டோபர் 9) அறிக்கை ஒன்றில் இத்தகவலை வெளியிட்டது.
மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 11 மணியளவில் அவர் காலமானார். மும்பை நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் அறிந்த இருவர் முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவின் ஆகப் பெரிய குழுமங்களில் ஒன்றான டாடாவின் கெளரவத் தலைவராகப் பொறுப்பு வகித்த அவரின் உடல்நலம் குறித்து சில செய்திகள் வெளிவந்தன.
அதனைத் தொடர்ந்து தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வயது காரணமாக அடிக்கடி மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகளைத்தான் தாம் மேற்கொள்வதாகவும் அவர் கடந்த திங்கட்கிழமையன்று (அக்டோபர் 7) சமூக ஊடகம்வழி குறிப்பிட்டிருந்தார்.
திரு டாடா, டாடா குழுமத்தை உலகளவில் பிரபலப்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர். அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
திரு டாடாவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
“திரு ரத்தன் டாடா ஒருமித்த சிந்தனைகளை மையமாகக் கொண்ட இலக்குகளுடன் செயல்பட்ட வர்த்தகத் தலைவர், கனிவன்புமிக்கவர், தனிச்சிறப்புமிக்க மனிதர்” என்று திரு மோடி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவின் ஆகப் பழமையான, பிரசித்திபெற்ற நிறுவனங்களில் ஒன்றுக்கு நிலைத்தன்மைகொண்ட தலைமைத்துவத்தை திரு டாடா வழங்கினார்,” என்றும் திரு மோடி பாராட்டினார்.
“இந்தியத் தொழில்துறை ஜாம்பவான் அவர்,” என்று தி இந்து நாளிதழ் அதன் முதல் பக்கத்தில் திரு டாடாவுக்கு மரியாதை செலுத்தியது.
இந்தியா அதன் பொக்கிஷத்தை இழந்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் பதிவிட்டது.
முகேஷ் அம்பானி உள்ளிட்ட இதர தொழில்துறை வர்த்தகர்களும் திரு டாடாவுக்குத் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
“இது டாடா குழுமத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்குமான பேரிழப்பு,” என்று ஆசியாவின் ஆகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி கூறினார்.
அமெரிக்காவின் கொர்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டட வடிவமைப்புப் பட்டக் கல்வியை முடித்தவுடன் திரு டாடா 1962ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமது கொள்ளுத் தாத்தா நிறுவிய டாடா குழுமத்தில் அவர் வேலை பார்க்கத் தொடங்கினார்.
1991ஆம் ஆண்டு தமது உறவினரான ஜே.ஆர்.டி. டாடா பதவி விலகியதைத் தொடர்ந்து திரு ரத்தன் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
திரு டாடாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே அறிவித்தார். அதோடு, வியாழக்கிழமை (அக்டோபர் 10) துக்க அனுசரிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை பிற்பகல் திரு டாடாவுக்கான இறுதிச் சடங்கு மும்பையில் நடைபெற்றது. அவரின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி, இந்திய தேசியக் கொடியால் போர்த்தப்பட்டது.