விபத்தில் சிக்கியவருக்கு உதவாமல் அவரது பணத்தைத் திருடிச் சென்றனர்!

விபத்தில் சிக்கியவருக்கு உதவாமல் அவரது பணத்தைத் திருடிச் சென்றனர்!

ஊடகம்

14 Jan 2024 - 2:20 pm

1 mins read

ஆக்ரா: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவருக்கு உதவாமல், அவ்வழியே சென்றவர்கள் அவரது பணத்தைத் திருடிச் சென்றது அதிர்ச்சி அளித்துள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நிகழ்ந்தது.

இதன் தொடர்பில் 47 நொடிக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) ஆக்ரா - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று, 20 வாகனங்கள்மீது மோதியது. இவ்விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

அவர்களில் பால் வணிகரான 46 வயது தர்மேந்திர குமார் குப்தாவும் ஒருவர். அவர் மதுராவிலிருந்து தமது மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது பையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் பணமிருந்ததாக அவருடைய குடும்பத்தினர் கூறினர்.

விபத்து நிகழ்ந்தபின் தர்மேந்திராவைச் சுற்றி நின்றிருந்த சிலர், அவரிடமிருந்த பணத்தைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதா அல்லது தாங்களே வைத்துக்கொள்வதா என்று பேசிக்கொள்வது காணொளியில் கேட்கிறது. “முதலில் பணத்தை எடுத்துக்கொள்வோம்,” என்று சிலர் கூறுவதும் பணத்தைத் தங்களது பைகளில் வைப்பதும் காணொளியில் தெரிகிறது.

“பணத்தை எடுத்துக்கொண்டவர்கள், தர்மேந்திராவை மருத்துவமனையில் சேர்த்திருந்தால்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்,” என்று சொல்லி ஆதங்கப்பட்டார் அவருடைய சகோதரர் மகேந்திரா.

காணொளி வெளியானதை அடுத்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்