புதுடெல்லி: இந்தியாவின் 15வது துணை அதிபராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) பதவியேற்றார்.
இந்தியாவின் அதிபர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் அவருக்கு அதிபர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முக்கியமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணியின் வேட்பாளரான நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் திரு சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்தன.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். மாணவராக இருந்தபோதே, அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார்.
பொது மக்களுக்கு உதவும் ஓர் ஊடகமாக அரசியலைப் பயன்படுத்தியவர்களில் இவரும் ஒருவர்.
கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து இருமுறை தேர்வு செய்யப்பட்ட திரு ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியின் நீண்ட நாள் நண்பர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
ஜார்க்கண்ட், தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் ஆளுநராகவும் புதுவையின் துணைநிலை ஆளுநராகவும் திரு ராதாகிருஷ்ணன் பணியாற்றியுள்ளார்.