புதுடெல்லி: தகுதியான மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெற வழிவகுக்கும் ‘பிரதமரின் வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உயர் கல்வி பெறுவதில் மாணவர்களுக்குப் பணப்பிரச்சினை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் இந்தப் புதிய திட்டம் வகுக்கப்பட்டதாகவும் ரூ.3 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் இதைச் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
“பிஎம் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், நாட்டின் தலைசிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களில் பயில சேர்க்கை ஆணைப் பெறும் அனைத்து மாணவர்களும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்துப் பிணையில்லாமல் கல்விக் கடன் பெற முடியும். முழு கல்விக் கட்டணம், படிப்பு சார்ந்த இதர செலவுகள் போன்றவை இதில் அடங்கும்,” எனச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறித்து பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உயர் கல்விக்கான அணுகலுக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர் சக்திக்கு அதிகாரமளித்து, தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எளிய, வெளிப்படையான, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் மின்னிலக்க முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் இதுவாகும். மேலும், இந்தியாவின் தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டம் கல்விக் கடன், வட்டி மானியம் உள்ளிட்ட பல பயன்களைக் கொண்டது.
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையத்தளத்தில் மாணவர்கள் உயர்கல்விக்கான கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வியை இத்திட்டம் உறுதிசெய்யும் என்பதுடன் தொழில்நுட்பக் கல்வியில் உயர்கல்வியைத் தொடர தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.