கிருஷ்ண ஜென்ம பூமியில் கர சேவை அழைப்பு: மதுராவில் பதற்றம்

கிருஷ்ண ஜென்ம பூமியில் கர சேவை அழைப்பு: மதுராவில் பதற்றம்

2 mins read
5e542eee-f5e5-4ea8-88e9-bab79e7656eb
மதுரா நகரை நோக்கி வரும் ஏராளமான வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் நகரம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். - படம்: தைனிக் பாஸ்கர்
Google News Preferred Icon

மதுரா: கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க விடுக்கப்பட்ட கர சேவை அழைப்பு காரணமாக மதுராவில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

கடவுள் கிருஷ்ணர் பிறந்த தலமாகக் கருதப்படுகிறது மதுரா நகரம். ராம ஜென்ம பூமி கர சேவைக்குப் பிறகு, மதுரா நகரை மையப்படுத்தியும் கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) அதையேற்று மதுராவுக்கு ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் பயணம் மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலர் மதுராவுக்குள் நுழையும் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்து சமயத்தைச் சேர்ந்த நான்கு முக்கியத் தலைவர்களும் தடுக்கப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மதுராவில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்க கர சேவை ஏற்பாட்டாளர்கள் மீண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி கர சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூ​தி பள்ளிவாசலுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மதுரா காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரா நகருக்குள் புதியவர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே மதுரா நோக்கி வந்தவர்களைக் கண்ணியமாகப் பேசித் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மதுரா நகரின் எல்லைப் பகுதிகளில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரா நகரை நோக்கி வரும் ஏராளமான வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் நகரம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

“அயோத்தி ராமர் கோவில் போன்று மதுராவில் பிரம்மாண்டமான கிருஷ்ணர் கோவிலைக் கட்டத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ராஜஸ்தானில் இருந்து கற்களை வரவழைத்துள்ளோம். கிருஷ்ண ஜென்ம பூமி மிக விரைவில் நாடு தழுவிய இயக்கமாக மாறும்,” என கர சேவை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைஅயோத்திகோவில்