ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (செப்டம்பர் 18) நடைபெறுகிறது.
இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 19ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்கிறார். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. அங்கு ஆகக் கடைசியாக 2014ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

