ஒட்டாவா: மாணவர் விசா பெற்று கடந்த 2024ஆம் ஆண்டு கனடா சென்றோரில், வெளிநாட்டு மாணவர்களில் ஏறக்குறைய 50,000 பேர் தங்களது கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் கிட்டத்தட்ட 19,582 பேர் இந்திய மாணவர்கள் என்று கனடியக் குடிநுழைவு, அகதிகள், குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில், மாணவர் விசா பெற்ற வெளிநாட்டு மாணவர்களில் 6.9 விழுக்காட்டினர் தங்களுக்கான உயர்கல்வி நிலையத்தில் தலைகாட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், மாணவர் விசாவைத் தவறாகப் பயன்படுத்துதல், எல்லை தாண்டிய பாதுகாப்புப் பிரச்சினை போன்றவற்றுக்கான சாத்தியம் தொடர்பில் கவலை எழுந்துள்ளது.
இதனிடையே, கனடா - அமெரிக்கா எல்லை வழியாக இடம் பெறும் சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பில் கனடியக் கல் லூரிகளுக்கும் இந்தியாவிலுள்ள நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புள்ளதா என்பது குறித்து இந்தியச் சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
கனடாவில் கல்வி பயில விசா பெற்ற இந்திய மாணவர்கள் சிலர், அதனைப் பயன்படுத்தி கள்ளத்தனமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் கூட்டரசுப் பொருளியலாளரும் குடிநுழைவு வல்லுநருமான ஹென்றி லாட்டின், தங்களுக்கான உயர்கல்வி நிலையங்களில் சேராத இந்திய மாணவர்களில் பெரும்பாலோர் கனடாவிலேயே தங்கி வேலை செய்தபடி, நிரந்தரவாசத் தகுதிபெற முயலக்கூடும் என்று ‘தி குளோபல் அண்ட் மெயில்’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, மாணவர் விசா பெற்றபின் கல்வி நிலையங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேராமல் இருப்பதைத் தடுக்க அவர்களை முதலிலேயே கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்ல வேண்டும் என்று திரு லாட்டின் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர் சேர்க்கைப்பதிவு தொடர்பில் அறிக்கை அளிக்கத் தவறும் கல்வி நிலையங்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான விதிகளைக் கனடியக் குடிநுழைவு அமைச்சர் மார்க் மில்லர் அண்மையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.