புதுடெல்லி: இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் கனடா 3,323 இந்தியர்களை அவர்களின் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டது.
இது, அமெரிக்கா கிட்டத்தட்ட ஏழு மாதங்களில் நாடுகடத்திய 1,273 இந்தியர்களைப்போல் ஏறத்தாழ மூன்று மடங்காகும்.
கனடிய எல்லைச் சேவைகள் முகமைத் (சிபிஎஸ்ஏ) தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு முழுவதிலும் நாடுகடத்தப்பட்ட 3,779 இந்தியர்களில் 88 விழுக்காட்டினர் இவ்வாண்டின் முற்பாதியிலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர். இதே வேகம் தொடர்ந்தால், கனடா கடந்த ஆண்டுச் சாதனையை முறியடித்து புதிய உச்சத்தைத் தொடும்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுப்படி, 2026 ஜனவரி 1 முதல் ஜூலை 22 வரை அமெரிக்கா 1,273 இந்தியர்களை நாடுகடத்தியது. அந்நாடு 2025ஆம் ஆண்டில் 3,567 இந்தியர்களைத் திருப்பி அனுப்பியது.
அனைத்துலக மாணவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கனடா தனது குடிநுழைவு விதிகளைக் கடுமையாக்கி வருகிறது. சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அது தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு முற்பாதியில் கனடாவைவிட்டு வெளியேற்றப்பட்டோரில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த மெக்சிகோவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. 2026 ஜனவரி - ஜூன் காலகட்டத்தில் 1,573 மெக்சிகோ நாட்டவர்களைக் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர்.
கடைசியாக, கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோரில் 2020ஆம் ஆண்டு இந்தியர்கள் முதலிடத்தில் இருந்தனர். அவ்வாண்டு மொத்தம் 1,424 இந்தியர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோல், 2025ல் அங்கிருந்து 3,779 பேர் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர்.
குடிநுழைவு விதிகளை மீறுதல், விசா காலம் முடிந்த பிறகும் தங்குதல், விசா மோசடிகள் போன்ற காரணங்களுக்காகவே பெரும்பாலும் வெளிநாட்டினர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுகின்றனர்.
தற்போது கனடாவின் நாடுகடத்தல் காத்திருப்புப் பட்டியலில் 7,669 இந்தியர்கள் இருப்பதாக சிபிஎஸ்ஏ தரவுகள் காட்டுகின்றன.
இதனிடையே, அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசும் குடிநுழைவு விதிமுறைகளையும் நாடுகடத்தலையும் கடுமையாக்கி வருகிறது.


