புதுடெல்லி: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம் லாங்லி வட்டாரத்தில் எரிந்த காருக்குள் இருந்து இந்திய ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சர்ரே நகரில் வசித்துவந்த 25 வயது துஷார் சர்மா என்பவரே உயிரிழந்தவர் எனக் கனடியப் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ராலிசன் கிரெசன்ட் பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாகத் தகவல் கிடைத்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தபோது காருக்குள் மனித எச்சங்களைக் கண்டெடுத்தனர்.
சர்மாவுக்குக் குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்றும் கனடாவில் அவருக்குக் குறைந்த அளவிலான தொடர்புகளே இருந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு காரணமாகக் கொலை நடந்ததா, காருக்கு ஏன் தீ வைக்கப்பட்டது என்பது குறித்துப் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
சர்மா உயிரிழப்பதற்கு முன்னர் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள், அன்றைய இரவு அப்பகுதியில் பதிவான கண்காணிப்புப் படங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்துத் தகவல் அறிந்தவர்கள் முன்வந்து உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வழக்குத் தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.
