புதுடெல்லி: இந்தியாவும் கனடாவும் வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உத்திபூர்வ அளவில் உறவை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாகக் கனடிய வெளியுறவு அமைச்சர் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
திருவாட்டி அனிதா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) புதுடெல்லி சென்றார். 2019ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்தபிறகு திருவாட்டி அனிதா அரசதந்திர முறையில் முதல்முறையாக இந்தியா சென்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகக் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்ய இரு தரப்பும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
திருவாட்டி அனிதா தனது பயணத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் தலைவர்களைச் சந்தித்த பிறகு திருவாட்டி அனிதா மும்பை செல்கிறார். அங்கு அவர் இந்திய மற்றும் கனடியத் தொழில் அதிபர்களைச் சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் முதலீடு, புதிய வேலைகள், பொருளியல் வாய்ப்புகள் குறித்து அவர் பேசவுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளும் புதிய தூதர்களை அறிவித்தன. கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.