இந்தியா வந்தார் கனடியப் பிரதமர்

இந்தியா வந்தார் கனடியப் பிரதமர்

2 mins read
bc0e0fde-b9be-43f0-8dfd-a044894f1a12
கனடியப் பிரதமர் மார்க் கார்னி நான்கு நாள்கள் இந்தியாவில் இருப்பார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: கனடியப் பிரதமர் மார்க் கார்னி அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) இந்தியா வந்து சேர்ந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசும் திரு மார்க் கார்னி, தொடர்ந்து இந்தியத் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்ட நிலையில், மார்க் கார்னியின் இந்தப் பயணம் இருநாட்டு உறவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கனடா இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்லுறவே இருந்து வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில்கூட கனடாவுக்குத் தேவையான தடுப்பூசிகளை இந்திய அரசாங்கம் வழங்கி உதவியது.

ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது நிலைமை தலைகீழாக மாறியது.

அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கனடாவில் சீக்கிய பயங்கரவாதி கொல்லப்பட்டதற்கு இந்தியாதான் காரணம் என பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். ஆதாரம் வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என இந்தியா கூறியபோதிலும், ஆதாரத்தை ட்ரூடோ அரசு வழங்கவில்லை. மாறாக, கனடியப் பிரதமர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததால் உறவு பாதிக்கப்பட்டது.

அதன் பிறகு, கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ட்ரூடோ தோற்றதால் மார்க் மார்னி கனடா பிரதமராகப் பதவியேற்றார்.

அதன் பிறகே இந்தியா கனடா இடையேயான உறவு சீரடையத் தொடங்கியது.

கனடாவில் நடந்த பயங்கரவாதி கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என அண்மையில் கனடா அரசு வெளிப்படையாகவே அறிவித்தது. இந்தச் சூழலில் தான் பிரதமர் மார்க் கார்னியின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது.

நான்கு நாள்கள் இந்தியாவில் இருக்கும் திரு மார்க் கார்னி, பிரதமர் மோடியை திங்கட்கிழமை (மார்ச் 2) சந்தித்துப் பேசுகிறார். அப்போது பல முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்