புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி கழகம் (சிபிஎஸ்இ), தரத்தைப் பின்பற்றாத 21 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
இக்கல்வி கழகம் வகுத்திருக்கும் நெறிமுறைகளையும் விதிமுறைகளையும் சிபிஎஸ்இ அடிப்படையிலான கல்வியை வழங்கும் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், புதுடெல்லி, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் இயங்கும் சில பள்ளிகள் இவற்றைப் பின்பற்றவில்லை எனப் புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து, கழகத்தின் கல்வி அலுவலர்கள் அப்பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை நடத்தினர். அப்போது, அப்பள்ளிகளில் போதுமான மாணவர்கள் எண்ணிக்கை இல்லை என்பதும் அங்குப் பயிலும் மாணவர்களும் சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவற்றை சரிவர வழங்காத 21 பள்ளிகளின் அங்கீகாரத்தைக் கழகம் ரத்து செய்துள்ளது. மேலும், 6 பள்ளிகளை மேல்நிலைப் பள்ளி தரத்தில் இருந்து உயர்நிலை பள்ளிகளாக தரமிறக்கப்பட்டுள்ளதாகக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.