புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை 70 விழுக்காடு வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டு அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக இந்த விலைக் குறைப்பு சாத்தியமாகி உள்ளது. மொத்தம் 137 முக்கியப் புற்றுநோய் மருந்துகளின் விலை குறையக்கூடும்.
இந்தப் புதிய விலைக் குறைப்பு வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த 137 வகை மருந்துகளுக்கான மொத்த, சில்லறை வர்த்தகர்களின் லாப வரம்பு அதிகபட்சமாக 30 விழுக்காடாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இடைத்தரகர்களின் அதிகப்படியான லாபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை கணிசமாகக் குறையும்.
உச்ச நீதிமன்றம் தெரிவித்த அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,500 கோடி மிச்சமாகும்
சில அதிநவீன புற்றுநோய் மருந்துகளின் ஒரு வயலின் (Vial) விலை பல லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், இந்த விலைக் குறைப்பு ஏழை, நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும்.
அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் நோயாளிகளுக்கு ஆண்டிற்குச் சுமார் ரூ.2,500 கோடி வரை செலவு குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2019ஆம் ஆண்டில் 42 புற்றுநோய் மருந்துகளுக்கு இதேபோன்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டதில், 526 மருந்து வகைகளின் விலை 90 விழுக்காடு வரை குறைந்தது நினைவுகூரத்தக்கது.
உற்பத்தியாளர்களுக்கு எச்சரிக்கை
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் திருத்தப்பட்ட விலைப்பட்டியலை ஏழு நாள்களுக்குள் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
புதிய விலைப் பட்டியலை வலைத்தளங்களிலும், மருத்துவமனைகள், மருந்துக்கடைகளிலும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும்.
விலை குறைப்பைக் காரணம் காட்டி மருந்து உற்பத்தியையோ அல்லது விநியோகத்தையோ குறைக்கக்கூடாது என உற்பத்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளின் புதிய திருத்தப்பட்ட விலைகளை ‘ஃபார்மா சஹி தாம்’ செயலி அல்லது ஆணையத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம் மூலம் எளிதில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்த விலைக் குறைப்பு முறை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
