புற்றுநோயைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடித்திருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதைப் பரிசோதித்துப் பார்த்ததில், அந்த மருந்தின் செயல்பாடு மனநிறைவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு புற்றுநோயாளிகளுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நிம்மதியும் ஆறுதலும் அளித்துள்ள போதிலும், அந்நோய் தொடர்பான அச்சம் இன்னும் மனித குலத்தை விட்டு அகலவில்லை என்பதே உண்மை.
அதிலும், இந்தியா போன்ற புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நாடுகளில், பலர் இந்நோயால் பாதிக்கப்படுவதும் இறப்புக்கு முன்னும் பின்னும் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் அனுபவிக்கும் வலி, வேதனை போன்றவை வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று.
உலக அளவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான், பெண்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், இந்தியாவிலோ இது தலைகீழாக உள்ளது.
அதேவேளையில், இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் இறப்பது பெண்கள் அல்ல, ஆண்கள்தான்.
‘வேர்ல்ட் கேன்சர் ரிசர்ச் ஃபண்ட்’ என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட சில புள்ளிவிவரங்கள் நம்மைப் பதற வைப்பதாக உள்ளன.
“கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் ஏறக்குறைய 212 ஆண்களுக்கும் 186 பெண்களுக்கும் புதிதாக புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
“எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது, 2022ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு கோடி ஆண்களுக்கும் 50 லட்சம் பெண்களுக்கும் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்று ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் கண்டறியப்படும் புதிய புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2025ஆம் ஆண்டு முடிவுக்குள் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 17.70 லட்சத்தை எட்டும் என்றும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இது 20 லட்சமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், இப்பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏறக்குறைய 79,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையானது தற்போது ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது.
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் தமிழக சுகாதாரத் துறை இணைந்து நடத்திவரும் ‘தமிழகப் புற்றுநோய் பதிவேடு திட்டம்’ மூலம் இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயாளிகள் அதிகரிப்புக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. எனினும், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய குடிமக்களுக்குப் புதிதாகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது.
இந்த எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்கும் என்பது கவலை அளிக்கும் தகவல்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் புற்றுநோயாளிகள் குறித்த புள்ளிவிவரங்களை அவ்வப்போது வெளியிடுகின்றன.
இந்தியப் பெண்களுக்கு கர்ப்பப்பை, சினைப்பை, மார்பகப் புற்றுநோய்தான் அதிகம் ஏற்படுகிறது. அதேசமயம் ஆண்கள் வாய்ப்புற்று, ‘பிராஸ்டேட்’, நுரையீரல் புற்று ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்திய ஆண்கள் புகையிலை, புகைபிடிக்கும் பழக்கத்தால்தான் புற்றுநோய் எனப்படும் புதைகுழிக்குள் விழ நேரிடுகிறது. ஆண்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 40 விழுக்காட்டினர் புகையிலைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது, தாய்ப்பால் வழங்காதது, உடல் பருமன் ஆகியவை பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்கள் என மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சி நாள்பட்டதாக இருக்கும். ஒரு மருத்துவரைப் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் ஒரு பெண் சந்திக்க வேண்டியுள்ளது.
இதன் காரணமாக, புற்றுநோய்க்கான அறிகுறிகள் தன் உடலில் தென்படுவதை பெண்களால் விரைவில் தெரிந்துகொள்ள முடியும். இதனால்தான் அவர்கள் புற்றுநோயில் இருந்து விரைவில் குணமடைகிறார்கள்.
தமிழ்நாட்டில் புற்றுநோய் உயிரிழப்பு குறித்த தரவுகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்ற அங்கலாய்ப்பும் உள்ளது.
40% புற்றுநோய் உயிரிழப்புகள் மட்டுமே முறையான மருத்துவச் சான்றிதழுடன் பதிவாகின்றன. கிராமப்புறங்களில் புற்றுநோயாளிகள் வீட்டிலேயே இறந்துபோவதால் இந்த மரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்று இதற்குக் காரணம் கூறப்படுகிறது.
அதேபோல், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகும் உயிர்பிழைக்கும் விகிதம் தமிழகத்தில் குறைந்துவிட்டதாக இன்னொரு தரப்பினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இந்நோய்க்கான சிகிச்சை முறைகள், வசதிகள் மேம்பட்டிருந்தாலும் நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, உயிர்பிழைக்கும் விகிதம் 30%க்கும் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
எந்த நோயாக இருந்தாலும், தொடக்க நிலையிலேயே அதனைக் கண்டறிந்துவிட்டால் உயிர்பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம். நோயிலிருந்து முழுமையாக மீள, அது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம் என்பதையே நம்மைச் சுற்றி நிகழும் மரணங்களின் பல்வேறு தரவுகளும் உணர்த்துகின்றன.
பெட்டிச் செய்தி:
[ο] பத்து வகையான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் புதிய பரிசோதனை திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இதற்கு ரூ.2,500 மட்டுமே கட்டணம்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சென்னையில் இலவசமாக தங்கிச்செல்லும் ஏற்பாட்டைச் செய்துள்ளது ‘இன்டாஸ் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு. மேலும், இலவச உணவும் போக்குவரத்து வசதியும்கூட அளிக்கப்படுகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் இன்று வரை 540 நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.
“புற்றுநோயாளிகளுக்கு ஏற்கெனவே பல செலவுகள் பெரும் சுமையாக அழுத்தம் கொடுக்கும். அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி இது,” என்கிறார் இத்திட்டத்தின் இணைத் தலைவர் பரத் சுபாஷ்.