தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுப்புட்டிகளிலும் புற்றுநோய் எச்சரிக்கை: எய்ம்ஸ் மருத்துவர்கள் கோரிக்கை

1 mins read
a9e88886-bd92-48c5-b666-c99b96449635
புற்றுநோய் பாதிப்பில் 4.7 விழுக்காட்டிற்கு மதுபானமே காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். - மாதிரிப்படம்

புதுடெல்லி: புகையிலைப் பொருள்கள்மீது புற்றுநோய் எச்சரிக்கை வாசகங்களும் படங்களும் இடம்பெறுவதைப் போல மதுபானங்களிலும் அவை இடம்பெற வேண்டும் என்று அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிலைய (எய்ம்ஸ்) ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டில் 1.01 மில்லியனாக இருந்த அந்த எண்ணிக்கை 36 விழுக்காடு அதிகரித்து 2022ஆம் ஆண்டில் 1.38 மில்லியனாக உயர்ந்துவிட்டது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 1.41 மில்லியன் பேர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனைத்துலகப் புற்றுநோய்க் கண்காணிப்பகத்தின் (குளோபோகேன்) 2022ஆம் ஆண்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் பாதிப்பில் 4.7 விழுக்காட்டிற்கு மதுபானமே காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘பொதுச் சுகாதார முன்னோடிகள்’ எனும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குறைந்தது ஏழு வகைப் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை மதுப்பழக்கம் அதிகரிக்கிறது என்று அமெரிக்கத் தலைமை அறுவை மருத்துவர் இவ்வாண்டில் வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பில் கூறியுள்ளதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆண் பெண் பாகுபாடின்றி அனைவரும் அதனால் பாதிக்கப்படலாம் என்றும் குறைந்த அளவு மது அருந்துவதால் புற்றுநோய் அபாயம் இராது என்பதில் உண்மையில்லை என்றும் அந்த ஆலோசனைக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதனையடுத்து, மதுப்புட்டிகளில் அல்லது கலன்களில் புற்றுநோய் குறித்த எச்சரிக்கும் வாசகங்களோ படங்களோ இடம்பெறுவது மது அருந்துவதைக் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்