கஞ்சா கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் மலேசியப் பெண் பயணி கைது

கஞ்சா கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் மலேசியப் பெண் பயணி கைது

படம்: தி இந்து

29 Sep 2026 - 5:10 pm

2 mins read

சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான 3.4 கிலோ உயர் ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் போதைப்பொருள்களைக் கடத்தி வந்த பெண் பயணியைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக விமான நிலைய சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் விமான நிலைய முனையத்தில் தீவிர கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மலேசியாவில் இருந்து வந்து தரையிறங்கிய பயணிகள் விமானத்தில் வந்த அனைவரும் தீவிரமாகச் சோதிக்கப்பட்டனர். மலேசியாவுக்குச் சுற்றுலா சென்று திரும்பிய பெண் பயணி ஒருவரின் நடத்தையில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது.

இதனால் அவரது உடைமைகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர் கொண்டு வந்த பெட்டியில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது பைகளைப் பிரித்துச் சோதனையிட்டதில், நான்கு தனித்தனி உறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர் ரக கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அதன் மொத்த எடை 3.4 கிலோ ஆகும். அதன் அனைத்துலக கள்ளச் சந்தை மதிப்பு ஏறக்குறைய 1.2 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சாவைக் கடத்தி வந்த பெண் பயணியைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரைப் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த உயர் ரக கஞ்சா சென்னைக்கு யாருக்காகக் கொண்டு வரப்பட்டது, விமான நிலையத்திற்கு வெளியே போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்த நபர்கள் யார், இதன் பின்னணியில் அனைத்துலகக் கடத்தல் கும்பல் உள்ளதா? என்ற கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகஞ்சாசென்னை விமான நிலையம்போதைப்பொருள்கடத்தல்சுங்கத்துறை