புதுடெல்லி: உலகின் நான்காவது பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுத்திருப்பது கொண்டாட வேண்டிய தகவல்தான் என்றாலும், தனிநபர் வருமானத்தில் ஜப்பானைவிட அந்நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும் என உலகப் பொருளியல் மன்றத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கிளாட் ஸ்மாட்ஜா கூறினாா்.
மேலும், பொருளியலில் ஜப்பானை விஞ்சிவிட்டதால் இந்தியா மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்றும் அவர் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
உலகப் பொருளியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்திருப்பது அந்நாடு முன்னேற்றம் அடைந்து வருவதைக் காட்டும் நல்ல அளவீடு என்றும் அவர் கூறினார்.
பொருளியல் சீா்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்வதை உறுதி செய்வதற்கும் இந்தியாவின் புதிய பொருளியல் நிலை தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்றார் திரு கிளார் ஸ்மாட்ஜா.
“2030ஆம் ஆண்டுக்குள் ஏழு லட்சம் கோடி அமெரிக்க வெள்ளி கொண்ட பொருளியலாக மாற, இந்தியா தமது தொழில்துறையை விரிவுபடுத்த வேண்டும்.
“தற்போது இந்தியப் பொருளியல் வளர்ச்சியில் உற்பத்தியின் பங்கு சீனாவில் உள்ளதைவிட பாதியாக உள்ளது. அந்நாட்டின் அளவு, மக்கள் தொகை, பொருளியல் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் இது மிகவும் குறைவு,” என அவர் சொன்னார்
அனைத்துலகப் பண நிதியத்தின் ஏப்ரல் மாதத் தரவுகளின்படி, இந்தியாவின் தனிநபா் வருமானம் 2,878.4 அமெரிக்க டாலர்.
ஜப்பானின் தனிநபர் வருமானம் 33,955.7 அமெரிக்க டாலர். ஒப்புநோக்கையில், இந்தியாவின் தனிநபா் வருமானத்தைவிட ஜப்பானின் தனிநபா் வருமானம் 11.8 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

