புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாகப் புழக்கத்தில் உள்ள ‘கேப்டகான்’ என்ற போதைப்பொருளை இந்திய போதைத் தடுப்பு அதிகாரிகள் டெல்லியில் பறிமுதல் செய்துள்ளனர். அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ. 182 கோடியாகும்.
ஜிஹாதி போதைப்பொருள் என்றும் குறிப்பிடப்படும் கேப்டகான் போதைப்பொருள், இந்தியாவில் பிடிபடுவது இது முதல் முறையாகும்.
அது இம்மாதம் (மே) 11ஆம் தேதி டெல்லியில் கேப்டகான் போதைப்பொருள் விற்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட அந்தச் சோதனையின்போது 31 கிலோ கேப்டகான் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டில் சிரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் தங்கியிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ஒரு கொள்கலனில் சோதனை நடத்தி, மேலும் 196 கிலோ கேப்டகானை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்மறி ஆட்டுக் கம்பளி என்ற போர்வையில் போதைப்பொருள் இந்தியாவுக்குக் கடத்தப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சிரியா நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
கேப்டகான் மாத்திரைகள் மோதல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிறைந்த மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் போதை தரும் செயற்கை ஊக்க மருந்தாகும். அது போராளிகள் இடையே போர்த்திறனை அதிகரிக்கவும் அவர்களின் மனத்தில் ஏற்படும் அச்சத்தை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கடத்தப்படவிருந்த போதைப்பொருளைக் கைப்பற்றி இருப்பது, அவற்றுக்கு எதிரான இந்தியாவின் சகிப்புத்தன்மையற்ற கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
‘ஆப்பரேஷன் ரேஜ்பில்’ என்ற பெயரில் கேப்டகான் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுத் தெரிவித்தார்.

