புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
செங்கோட்டை பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் அருகே உள்ள சாலையில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வெடிப்புச் சம்பவத்தையடுத்து டெல்லியில் பாதுகாப்பு உச்ச நிலையில் உள்ளது.
இந்திய நேரப்படி திங்கட்கிழமை (நவம்பர் 10) மாலை 6.30 மணி அளவில் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் ‘1’ பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்தது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன
வெடிப்பு நடந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் அருகிலிருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சாலையில் இருந்த சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. காயமடைந்த பலர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெடிப்புச் சம்பவத்தை அடுத்து டெல்லி, மும்பை, கோல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

