கூகல் காட்டிய பாதையால் நீரில் விழுந்த கார்

2 mins read
70586123-99f3-467c-a783-602f699253e5
கூகல் காட்டிய வழியில் சென்று நீரில் விழுந்த கார் மீட்கப்பட்டது. - படம்: என்டிடிவி

மும்பை: நவி மும்பை நகரில் கூகல் வரைபடம் காட்டிய வழியில் பயணம் செய்த பெண் ஒருவர் தவறுதலாக நீருக்குள் நேரே காரைச் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் பெலபூர் பகுதியிலிருந்து உல்வேக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது.

பெலபூரில் உள்ள பே பாலத்தில் செல்லவேண்டிய பெண்ணை பாலத்துக்கு அடியில் துருவத்தாரா அணைக் கரைக்கு இட்டுச்செல்லும் பாதை வழியாகப் பயணம் செய்யும்படி கூகல் வரைபடம் காட்டியது. அந்தப் பாதையில் சென்ற பெண் சில நிமிடங்களில் நீருக்குள் காரை விட்டார்.

சம்பவத்தைக் கண்ட கடற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் நீரிலிருந்து பெண்ணைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினர். காயம் ஏதுமின்றி அந்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவரது காரும் பின் நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.

இதுபோல கூகல் வரைபடம் காட்டிய தவறான வழியில் ஓட்டுநர்கள் பயணம் செய்வது முதல்முறை அல்ல.

கடந்த ஆண்டு மூவர் கொண்ட கார் ஒன்று கூகல் வரைபடம் காட்டிய வழியில் சென்று பழுதடைந்த பாலத்திலிருந்து 50 அடிக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில் பாய்ந்தது. அதில் காரில் இருந்த மூவரும் உயிரிழந்தனர்.

விபத்துக் குறித்த விசாரணையில் அதிகாரிகளுக்கு உதவிவருவதாகக் கூகல் நிறுவனம் குறிப்பிட்டது. சம்பவம் தொடர்பில், மாண்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாக நிறுவனம் அப்போது குறிப்பிட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஹைதராபாத்திலிருந்து கேரள மாநிலத்திற்குச் சென்ற சுற்றுலா குழு பயணம் செய்த கார் கூகல் வரைபடத்தின் பாதையைப் பின்பற்றி பெருக்கெடுத்து ஓடிய நதியில் விழுந்தது.

கடுமையான மழையால் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக ஏற்கெனவே நீரில் மூழ்கியிருந்த சாலையில் கார் பயணம் செய்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இருப்பினும் முன்பின் தெரியாத சாலையில் கூகல் வரைபடத்தைப் பயன்படுத்திய குழு, நேராக ஆற்றுக்குள் காரை விட்டதாக அதிகாரிகள் கூறினர். குழுவிலிருந்த நால்வரும் காயமின்றி தப்பினர்.

குறிப்புச் சொற்கள்
கூகல்கார்விபத்து