புதுடெல்லி: முழுவதும் 100 விழுக்காடு எத்தனாலில் இயங்கும் புதிய காரை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் காரை இயக்குவதற்கான எரிபொருள் செலவு பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தற்போது பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்கும் ‘E20’ கொள்கையானது நாட்டில் வெற்றிகரமாக அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், 100 விழுக்காட்டு எத்தனாலில் இயங்கும் டொயோட்டாவின் ‘இன்னோவா பிளக்ஸ் பியூயல்’ கார் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.
“இந்தக் கார் இயங்கும்போது 60 விழுக்காடு மின்சாரமும் உற்பத்தியாகி காரின் மின்கலத்துக்கு மின்னூட்டம் செய்யம்,” என்று கட்காரி தெரிவித்தார்.
அதே நிகழ்ச்சியில், கிராமப்புறங்களில் ‘பைக் டாக்சி’ சேவைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் கட்காரி வலியுறுத்தினார். செயலி அடிப்படையிலான ‘பைக் டாக்சி’ சேவைகள் மூலம் நாட்டில் கோடிக்கணக்கானோருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர்.
தேவையைவிடவும் உற்பத்தி அதிகரிப்பு
மற்றொருபுறம், இந்தியாவில் எத்தனால் உற்பத்தித் திறன் தேவையைவிடவும் கணிசமாக உயர்ந்து தொழில்துறையில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவின் எத்தனால் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு ஏறக்குறைய 20 பில்லியன் லிட்டராக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் கலப்புக்கான ‘E20’ திட்டம், பிற தேவைகளுக்கு ஆண்டுக்கு 14.5 பில்லியன் லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது.
உற்பத்தித் திறன் தேவையைவிட அதிகரித்துள்ளதால், ஏறக்குறைய ஏழு பில்லியன் லிட்டர் எத்தனால் திறனுக்குப் போதிய அளவில் சந்தை இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளது.
இதன் காரணமாகப் பல எத்தனால் ஆலைகள் தற்போது 60 விழுக்காட்டுத் திறனில் மட்டுமே இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபரியைக் கையாள டீசலுடன் எத்தனாலைக் கலப்பது, Bio-Isobutanol போன்ற மாற்று உயிரி எரிபொருள்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.
மேலும், எத்தனால் ஏற்றுமதி தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் நேப்பாளம் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பெட்ரோல் கலப்பை மட்டும் நம்பாமல், எத்தனாலுக்குப் புதிய சந்தைகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் தற்போது இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
