160 கி.மீ. வேகத்தில் இளையர் ஓட்டிய கார்: மாணவர்கள் உட்பட 7 பேர் பலி

160 கி.மீ. வேகத்தில் இளையர் ஓட்டிய கார்: மாணவர்கள் உட்பட 7 பேர் பலி

2 mins read
0221e17e-c9e5-40a7-838b-c9e67ac42900
160 கி.மீட்டர் வேகத்தில் ஓடிய காரால் எழுவர் உயிரிழந்தனர். - படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: பெங்களூருவில் 17 வயது மாணவர் 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த 6 மாணவர்களுடன் ஒரு வாகனமோட்டி என மொத்தம் ஏழுவர் உயிரிழந்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் அயன் அலி, 17, தனது ஐந்து நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) காலை 5 மணியளவில் ‘எக்ஸ்யூவி 700’ காரில் ஹொசக்கோட்டையிலிருந்து தேவனஹள்ளி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது கார், கட்டுப்பாட்டை இழந்து முதலில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ககன் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீதும் மோதியது. அந்த மோதலில் சரக்கு வாகன ஓட்டுநரான பாலசுப்பிரமணியன், 32, படுகாயமடைந்தார்.

கார் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் மோதியதால், அதன் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி, எதிரே வந்த வாகனங்கள் மீதும் மோதின. இதனால் அடுத்தடுத்து இரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, மேலும் நால்வர் காயமடைந்தனர்.

சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் எக்ஸ்யூவி கார் அப்பளம்போல் நொறுங்கியதில் காரில் பயணம் செய்த அயன் அலி உள்ளிட்ட அறுவரும் உயிரிழந்தனர்.

விசாரணையில், 17 வயதான அயன் அலி காரை மணிக்கு 160 முதல் 170 கி.மீ. வேகத்தில் ஓட்டியதே விபத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அயன் அலி உள்ளிட்ட அறுவரும் 10ஆம் வகுப்பு மாணவர்கள்.

பிள்ளைகள் வாகனங்களை ஓட்ட அனுமதிப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்