சென்னை: மாலத்தீவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை காசிமேட்டைச் சேர்ந்த வீராங்கனை கீர்த்தனா, மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மற்றொரு வீராங்கனையான காஸிமாவும் பதக்கங்களை வென்று அசத்தினார்.
மாலத்தீவின் மாலே நகரில் 7வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
அதில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா, காஸிமா உள்பட இந்திய வீராங்கனைகள், வெளிநாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளுடன் பங்கேற்றனர்.
மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர், மகளிர் குழுப் போட்டிகள் ஆகிய மூன்றிலும் கீர்த்தனா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.
கீர்த்தனா, காசிமேட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான காஸிமாவின் தந்தை மெஹபூப் பாஷாவிடம், தனது 8 வயதிலிருந்தே கேரம் பயிற்சிகளைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போட்டியில் காஸிமா, ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம், அணிப்போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.

