ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 9 பேர் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானாவைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர்களான அதுலாபுரம் கௌதம், ஃபர்சானா பேகம் ஆகியோர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஷியாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகாரில், “ஷியாம்பேட்டை, அரேபள்ளி ஆகிய கிராமங்களில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களில் சுமார் 300 தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளன.
“கிராம பஞ்சாயத்துச் செயலாளர்கள் உள்ளிட்டோர், இதற்கெனச் சிலரை வேலைக்கு அமர்த்தி, நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். பின்னர், அவற்றின் உடல்களைக் கிராமத்தின் ஒதுக்குப்புறங்களில் வீசியெறிந்துள்ளனர்” என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஷியாம்பேட்டை காவலர்கள் கிராம பஞ்சாயத்துச் செயலாளர்கள் உட்பட 9 பேர் மீது, ‘1960ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்’ கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

