ஜெய்ப்பூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய உத்தரப் பிரதேச காவல்துறை உயர் அதிகாரியின் பிஎச்டி முனைவர் படிப்பை ரத்து செய்து கான்பூர் ஐஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கான்பூரில் உள்ள ஐஐடி கல்வி நிலையத்தில் முனைவர் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்தார் முகமது மொஹ்சின்கான். அப்போது அங்கே படித்துக்கொண்டிருந்த மாணவியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
தனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்றாலும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக அந்த மாணவிக்கு வாக்குறுதி அளித்து, பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உதவி ஆணையர் முகமது மொஹ்சின்கான் குறித்து அந்த பாதிக்கப்பட்ட மாணவி ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
காவல்துறையிடம் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையில், மொஹ்சின்கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கொண்டு வந்த பிஎச்டி ஆய்வுப் படிப்பு ரத்து செய்யப்பட்டதாக கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி தம்மை முகமது மொஹ்சின்கான் மிரட்டியதாகவும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடப் போவதாக அச்சுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

