லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியின் வீட்டில் பல கோடி ரூபாய் ரொக்கம், நகைகள்

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியின் வீட்டில் பல கோடி ரூபாய் ரொக்கம், நகைகள்

2 mins read
c23ae2c4-e92c-4e6d-8be5-41b886ba934d
வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தும்மகொம்ம சுசரிதா. - படம்: என்டிடிவி

ஹைதராபாத்: லஞ்சம் வாங்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரியின் வீட்டில் ஏராளமான நகைகளும் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் ஷமிர்பேட்டைச் சேர்ந்த வட்டாட்சியர் மற்றும் இணைப் பதிவாளர் தும்மகொம்ம சுசரிதா.

சாணக் கால்வாய் மாற்றம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டு, பிரச்சினையைச் சுமுகமாக முடித்து வைக்க விவசாயிகளிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அவர்மீது புகார்கள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தமது ஓட்டுநர் மூலம் 2 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கியபோது அந்தப் பெண் அதிகாரி கையும் களவுமாகப் பிடிபட்டார்.

உடனடியாக வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சுசரிதா தற்போது விசாரணைக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவரது முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரது வீட்டிலும் உறவினர்கள், பினாமிகள் மற்றும் கூட்டாளிகளுக்குத் தொடர்புள்ள பிற இடங்களிலும் திடீர்ச் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத ​5.05 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சித்திப்பேட் மாவட்டத்தில் 2.17 ஏக்கர் வேளாண் நிலம், மூன்று ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஹைதராபாத் நகர எல்லைக்குள் இரண்டு குடியிருப்பு மனைகள், 12 லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு ஆடம்பர கார்கள், ஏறத்தாழ 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், 38 லட்சம் ரூபாய்க்கான வங்கி வைப்புத்தொகை ஆகியன அந்தச் சொத்துகளில் அடங்கும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதிகாரி சுசரிதா தமது வருமானத்திற்கு மீறி பெரும் சொத்துகளைக் குவித்திருப்பது கண்டறியப்பட்டதால் அவர்மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேறு ஏதேனும் பெயர்களைப் பயன்படுத்தி மேலும் எங்காவது சொத்துகள் வாங்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்