தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதிப் பாகுபாடு, அவதூறுப் பேச்சு: இண்டிகோ பயிற்சி விமானி புகார்

2 mins read
2ac9ee13-9d00-46d9-ad96-c65b6e8824f5
விமானி சரண்குமார் புகார் அளித்தபோதும், சம்பந்தப்பட்டவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவரது தரப்பு கூறுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்தில் சாதி பாகுபாடு காட்டியதாகவும் தம்மைப் பற்றி ஊழியர்கள் சிலர் அவதூறாகப் பேசியதாகவும் பயிற்சி விமானி ஒருவர் புகார் எழுப்பியுள்ளார்.

சரண்குமார் என்ற அந்தப் பயிற்சி விமானி அளித்த புகாரின் பேரில், இண்டிகோ ஊழியர்கள் மூன்று பேர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஷியாநெட் ஊடகச் செய்தி தெரிவித்தது.

அக்குறிப்பிட்ட மூன்று ஊழியர்களும், ‘திரும்பச் சென்று காலணிகளைத் தைக்கச் சொல்’ என்பன போன்ற அவதூறான வார்த்தைகளைத் தன்னைப் பார்த்து பயன்படுத்தியதாக சரண்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும், அவ்வப்போது தம்மை இழிவான பெயர்களைக் கொண்டு அழைப்பதாகவும் விமானிகளுக்கான அறையில் அமர்ந்து விமானத்தை இயக்க தனக்குத் தகுதி இல்லை என்று கேலி செய்ததாகவும் சரண்குமாரின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, சரண்குமாரின் தந்தை அசோக் குமார், தன் மகனை அவதூறாகப் பேசியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.

தன் மகன் உடன் பணியாற்றும் ஊழியர்களால் தொடர்ச்சியான, திட்டமிட்ட துன்புறுத்தல், பாகுபாடுகளுக்கு உள்ளானார் என்றும் அசோக் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

சாதியை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, தன் மகனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அந்த மூன்று ஊழியர்கள் நடந்துகொண்டதாகவும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தன் மகன் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாகவும் அசோக் குமார் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தவறு செய்யாத போதும், தன் மகனுக்கு ஊதியக் குறைப்பு, சலுகைகள் மறுப்பு எனப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் பணியிலிருந்து விலகக் கட்டாயப்படுத்தும் வகையில் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டதாகவும் அசோக் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி, நெறிமுறைகள் குழுவிடம் சரண்குமார் இது குறித்து புகார் அளித்தபோதும், சம்பந்தப்பட்டவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவரது தரப்பு கூறுகிறது.

இந்நிலையில், அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்