தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதி அரசியலில் நம்பிக்கையில்லை; பின்தங்கியவர்களை முன்னேற்றக் கணக்கெடுப்பு அவசியம்: மோடி

2 mins read
a5740d18-c0c4-48c4-aa4b-d92190178207
இந்தியப் பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பின்தங்கிய மக்களை முன்னேற்றவே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இம்மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள 20 முதல்வா்கள், 18 துணை முதல்வா்கள் பங்கேற்றனா்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியபோது, “ஆபரேஷன் சிந்தூரில் கிடைத்த வெற்றி, நாட்டின் தன்னம்பிக்கை, உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

“பாதுகாப்புத் துறையில் நாம் தற்சாா்புடன் செயல்பட முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய முப்படைகள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டன. இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் திட்டத்தில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.

“சாதியவாத அரசியலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதேநேரத்தில் சமூகரீதியாகப் பின்தங்கியிருப்பவா்களை முன்னேற்ற வேண்டும். எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது பின்தங்கிய மக்களை முன்னேற்றவும், நாட்டின் வளா்ச்சியின் பயன்கள் முழுமையாக கிடைக்காமல் உள்ள மக்களின் நலன்களைக் காக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை,” என்றாா்.

முதல்வா்களுக்கு வேண்டுகோள்

பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் 7 சிறப்பான நிா்வாக முறைகள் குறித்து அக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. அதில் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவதும் இடம்பெற்றது.

இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமா் மோடி, “பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் சிறப்பான நிா்வாகத்தை முதல்வா்கள் வழங்க வேண்டும். மாநிலத்தில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்பதை குழுக்கள் அமைத்துக் கண்காணிக்க வேண்டும்,” என்றாா்.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பதை ஆதரித்து மற்றொரு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமா் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதன் சாதனைகள், சிறந்த நிா்வாகம், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சாதனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்