ஐந்து, ஆறு நாள்கள் வேலை செய்தபின் ஒன்றிரண்டு நாள் ஓய்வெடுப்பது மனிதர்களான நம் வாடிக்கை. ஆனால், ஆடு, மாடு போன்ற பண்ணை விலங்குகள் ஓய்வின்றி நாளும் வேலைசெய்கின்றன.
ஆனால், இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில சிற்றூர்களில் கால்நடைகளுக்கும் வாரம் ஒருநாள் ஓய்வளிக்கப்படுகிறது.
ஓய்வுநாளன்று பசுக்களும் எருமைகளும் பால்கூடக் கறப்பதில்லை. அன்று அவற்றுக்கு நல்ல உணவும் வழங்கப்படுகிறது.
வாரம் ஒருநாளேனும் ஓய்வளிக்கப்படும்போது கால்நடைகள் நலமாகவும் ஆற்றலுடனும் விளங்குவதாக அவ்வூர்களைச் சேர்ந்த முதியவர்கள் சொல்கின்றனர்.
கால்நடைகளின் ஓய்வுநாளில் அவற்றிடம் வேலை வாங்குவது பாவம் என்றும் அவற்றின் உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நடைமுறை புதியதன்று! நூறாண்டுகளுக்கும் மேலாக இப்பழக்கத்தை அப்பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
பழங்குடி மக்கள் வியாழக்கிழமைகளிலும் மற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கால்நடைகளுக்கு ஓய்வளிப்பதாக லாத்தேஹார் மாவட்டம், துரிசாட் எனும் ஊரைச் சேர்ந்த சஞ்சய் கஞ்சு என்பவர் குறிப்பிட்டார்.
"எவ்வளவு அவசரமெனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடைகளிலும் நாங்கள் வேலை வாங்குவதில்லை. அப்படிச் செய்வதைப் பாவம் என நினைக்கிறோம்," என்றார் ஹெத்-போக்ரா ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராமேஸ்வர் சிங்.
தொடர்புடைய செய்திகள்
இப்பழக்கம் நடப்பிலிருப்பதை மாவட்ட விலங்குநல வாரிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியதாக 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி தெரிவிக்கிறது.
ஒருமுறை ஓய்வுநாளன்று ஒரு காளையைக் கொண்டு நிலத்தை உழுதபோது, அது அங்கேயே மயங்கி விழுந்து இறந்ததையடுத்து இப்பழக்கம் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஓர் ஊரில் தொடங்கிய பழக்கம் பின்னர் அருகிலுள்ள ஊர்களுக்கும் பரவியதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.


