புதுடெல்லி: சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது அல்லது அந்நாட்டின் வழியாக இடைவழிப் பயணமாக செல்லும்போது கவனமாகச் செயல்படும்படி தனது நாட்டின் குடிமக்களை இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக இண்டியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், ஷாங்காய் விமான நிலையத்தில் பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு திங்கட்கிழமை இந்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்தது.
சீனாவின் விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் இந்திய குடிமக்களை இலக்காகக் கொண்டு தொந்தரவு இல்லாமல் பயணம் செய்வதை சீனா அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்றும் அது நம்பிக்கை தெரிவித்தது.
கடந்த நவம்பர் 21ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த பேமா வாங் தொங்டோக் என்ற பெண் பயணி ஷாங்காய் வழியாக வேறு ஒரு நாட்டுக்குச் சென்றபோது சீன குடிநுழைவு அதிகாரிகளால் 18 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். அருணாச்சலப் பிரதேசத்தில் பிறந்ததால் இந்தியாவின் கடப்பிதழை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசம் தமது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.
இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசாங்கம், சீன விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பை சீனா அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
பயணிகளை அலைக்கழிப்பது அனைத்துலக பயண விதிமுறைகளுக்கு எதிரானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சீனாவுக்கு அல்லது சீனா வழியாகப் பயணம் செல்லும்போது கவனத்துடன் இருக்கும்படி தனது குடிமக்களை அறிவுறுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தொங்டோக் பயணி அலைக்கழிக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மறுத்த சீன வெளியுறவு அமைச்சு, விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டதாகக் கூறியது.
“நான் பிறந்த இடம் அருணாச்சலப் பிரதேசமாக இருந்ததால் என்னுடைய இந்தியாவின் கடவுச் சீட்டு செல்லாது என்று அவர்கள் கூறினர். அருணச்சலப் பிரதேசம் தங்களிடம் இடம் என்று அவர்கள் கூறினர்,” என்று பாதிக்கப்பட்ட பெண் பயணி தொங்டோக் கூறியுள்ளார்.

