மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்குத் தொடர்பில்லை என்று இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘எம். எஸ். டோனி: த அன்டோல்டு ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் டோனி வேடத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் சுஷாந்த்.
கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான அப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெருவரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், கடந்த 2020 ஜூன் 14ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியிலிருந்த தமது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சுஷாந்தின் உடல் மீட்கப்பட்டது.
சுஷாந்தின் காதலியாகக் கூறப்பட்ட நடிகை ரியாதான் அவரை உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டினார் என்று கூறி, சுஷாந்தின் தந்தை வழக்கு தொடுத்தார்.
பின்னர் அவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவ்வழக்கை விசாரித்த சிபிஐ, அதுகுறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) தாக்கல் செய்தது.
அவ்வறிக்கையில், “நடிகர் சுஷாந்தின் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதுகுறித்து சமூக ஊடகங்களில் பேசப்பட்ட அனைத்துத் தகவல்களும் தவறானவை. சுஷாந்தின் இறப்பைக் கொலை என்று சந்தேகப்பட எந்தச் சான்றும் கிடைக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக அவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம், சுஷாந்த் மரணம் குறித்த சிபிஐயின் நாலரை ஆண்டுகால விசாரணை முடிவிற்கு வந்துள்ளது. இதனையடுத்து, “இவ்வழக்கின் ஒவ்வோர் அம்சத்தையும் எல்லாக் கோணங்களிலும் முழுமையாக விசாரித்து, வழக்கை முடித்து வைத்த சிபிஐக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம்,” என்று ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கூறியுள்ளார்.