புதுடெல்லி: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், அந்நிறுவனத்தின் இயக்குநர்களான ஜெய் அன்மோல் அனில் அம்பானி, ரவீந்திர ஷரத் சுதாகர் ஆகிய இருவருக்கு எதிராக வங்கி (முன்னாள் ஆந்திரா வங்கி) அளித்த புகாரின் பேரில் சிபிஐ நடவடிக்கை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகத் தேவைகளுக்காக விநியோகச் சங்கிலி நிதி வங்கியின் மும்பை கிளையிலிருந்து ரூ.450 கோடி (S$64.95 மில்லியன்) வரை கடன் வரம்புகளை நிறுவனம் பெற்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துதல், வட்டி மற்றும் பிற கட்டணங்கள், பாதுகாப்பு நிலை, இதர தேவையான ஆவணங்களைச் சரியான நேரத்தில் சமர்ப்பித்தல், முழு விற்பனை வருமானத்தையும் வங்கிக் கணக்கு மூலம் செலுத்துதல் உள்ளிட்ட நிதி ஒழுக்கத்தைப் பராமரிக்க வங்கி நிபந்தனைகளை விதித்திருந்தது.
நிறுவனம் வங்கிக்குத் தவணைகளைச் செலுத்தத் தவறியதால், அந்தக் கணக்கு, 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் 30ஆம் தேதி அன்று செயல்படாத சொத்தாக வகைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 1, 2016 முதல் ஜூன் 30, 2019 வரையிலான மறுஆய்வுக் காலத்திற்கு கிராண்ட் தோர்ன்டன் நிறுவனம் கணக்குகளின் தணிக்கை சோதனையை மேற்கொண்டது. அதில் கடன் வாங்கிய நிதி தவறாகப் பிரிக்கப்பட்டு நிதியை திசைதிருப்பியது தெரியவந்தது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
“கடன் வாங்கிய நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாரர்கள்/இயக்குநர்கள் என்ற முறையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கணக்குகளைக் கையாளுதல், குற்றவியல் நம்பிக்கை மீறல் மூலம் நிதியை மோசடியாகக் கையாண்டுள்ளனர். மேலும், நிதி வழங்கப்பட்ட நோக்கத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிதியைத் திருப்பிவிட்டனர்,” என்று வங்கி குற்றம் சாட்டியுள்ளது.

