புதுடெல்லி: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் திங்கட்கிழமை (ஜனவரி 19) மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக, ஜனவரி 12ஆம் தேதி, 6 மணிநேரத்துக்கு மேலாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புதுடெல்லியில் இருக்கும் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் (சிபிஐ) முன்னிலையான அவரிடம் அதிகாரிகள் அடுக்கடுக்கானக் கேள்விகளை எழுப்பினர்.
அக்கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்களுக்கு அதிகாரிகள் ஆதாரம் கேட்ட நிலையில், அவற்றை அளிக்க அவர் தரப்பிலிருந்து அவகாசம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர்.
அவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிபிஐ விசாரித்து வருகிறது.
சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவ்வழக்குடன் தொடர்புடையவர்களைப் புதுடெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
கரூரில் வாகனத்தில் நின்று பேசியபோது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா, ஏழு மணிநேரம் தாமதம் ஏன், கூட்ட நெரிசலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, நெரிசலில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்தியது ஏன். போன்ற பல்வேறு கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றுக்கு விஜய் பதிலளித்த நிலையில், சில கேள்விகளுக்குக் கால அவகாசம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அவர் பதிலளித்த கேள்விகளுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும் சிபிஐ தரப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிகையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இந்தக் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரையும் சேர்க்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

