புதுடெல்லி: ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027’ பணிகளுக்காக 2026 ஜனவரி 15ஆம் தேதிக்குள் அதிகாரிகளை நியமிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் இந்தியாவின் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தரவுச் சேகரிப்புப் பணிகளுக்குக் கணக்கெடுப்பாளர்களும் மேற்பார்வையாளர்களுமே முதன்மைப் பொறுப்பு அதிகாரிகளாக இருப்பர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும் 700-800 பேர் குறித்த விவரங்களைச் சேகரிப்பர். ஆறு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். அத்துடன், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகக் கூடுதலாக 10 விழுக்காடு கணக்கெடுப்பாளர்களும் மேற்பார்வையாளர்களும் இருக்க வேண்டும்,” என்று தலைமைப் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள், எழுத்தர்கள், அல்லது மாநில அரசு அதிகாரிகள், உள்ளூர் அலுவலர்கள் ஆகியோர் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்படலாம் என்றும் மேற்பார்வையாளர் என்பவர் கணக்கெடுப்பாளரைவிட உயர்ந்த பதவியில் உள்ளவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளையும் மாநில அரசுகள் நியமிக்கும். மாவட்ட ஆட்சியர், மாவட்டக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லது நியமிக்கப்படும் எந்த ஓர் அதிகாரியும் மாவட்ட முதன்மை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியாக இருப்பார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் குறித்த காலத்தில் முடிப்பதற்காகக் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பேர் பணியமர்த்தப்படுவர்.
அப்பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சிறப்பு இணையவாயில் ஒன்றையும் தலைமைப் பதிவாளர் அலுவலகம் உருவாக்கி இருக்கிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 இரு கட்டங்களாக நடத்தப்படவிருக்கிறது. 2026 ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் வீடுகளைப் பட்டியலிடுவதும் கணக்கெடுப்பும் நடைபெறும். 2027 பிப்ரவரியில் மக்கள்தொகைக் கணக்கெடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முதற்கட்டப் பணிகளை மாநில அரசுகள் தங்கள் வசதிக்கேற்ப, 2026 ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் ஏதேனும் 30 நாள்களில் மேற்கொள்ளலாம்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மின்னிலக்க முறையில் நடத்தப்படும். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி எடுத்த முடிவின்படி, சாதிவாரிக் கணக்கெடுப்பும் அதில் அடங்கும்.

