மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ல் நடைபெறும்: அரசாணை வெளியீடு

1 mins read
3c1a6ae6-8e26-4856-8628-64c5eb689b8c
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. - படம்: கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் 2027ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசிதழில் திங்கட்கிழமை (ஜூன் 16) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனது.

அதனைத் தொடர்ந்துக் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு நடத்தப்படும் என்றும் அத்துடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும் பாஜக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்தன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது.

லடாக், ஜம்மு-காஷ்மீா் ஒன்றிய ஆட்சிப்பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் 2026 அக்டோபா் 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

நாட்டின் பிற மாநிலங்களில் 2027ஆம் ஆண்டு மாா்ச் 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, இரண்டு கட்டங்களாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்