விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்; புதிய நிதியமைச்சர் நியமிக்கப்படலாம்

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்; புதிய நிதியமைச்சர் நியமிக்கப்படலாம்

2 mins read
720b2a6f-9fbf-4dfb-a364-21ea8a6e8cdc
நிர்மலா சீதாராமனுக்குப் பதிலாக சக்திகாந்த தாஸ் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்திய அமைச்சரவையில் ஓரிரு நாளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் நிர்மலா சீதாராமனுக்குப் பதில் சக்திகாந்த தாஸ் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

பாரதிய ஜனதா அரசாங்கம், 3வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் அறிகுறியாக, மத்திய இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி, ஹர்ஷ் மல்கோத்ரா ஆகியோர் கட்சிப்பணிக்கு அனுப்பப்பட்டனர். ஜார்ஜ் குரியனும் தனது பதவியிலிருந்து விலகினார். இந்தச் சூழலில், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதிபர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசினர். இது அமைச்சரவை மாற்றத்திற்கான ஊகங்களை மேலும் வலுப்படுத்தியது.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மாற்றம் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

அந்த மாற்றத்தில் தற்போது நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்குப் பதிலாக பிரதமரின் முதன்மைச் செயலாளரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு நியமிக்கப்படலாம் அல்லது அவர் கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல அமைச்சர் மனோகர் லாலுக்கு துறைகள் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பஞ்சாப் மாநிலத்திலிருந்து குறைந்தது இருவர் அமைச்சர்களாக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் நீக்கப்படலாம் என பேச்சுகள் வலம் வருகின்றன. வினாத்தாள் கசிவு விவகாரங்களில் அவர் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்.

புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்பவர்களில் மராட்டிய மாநிலத்தின் ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), ஆம் ஆத்மியில் இருந்து விலகிய ராகவ்சதா, திரிணாமூல் காங்கிரசிலிருந்து விலகிய சில எம்.பி.க்களின் பெயர்களும் அடிபடுகின்றன.

பீகார் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோல அனுராக் தாக்கூரும் மீண்டும் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

தற்போது ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் அந்தத் துறையில் திறன்மிக்க ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்