புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக 10,023 இடங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
இந்தியாவில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,023 இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கு 5,023 இடங்களும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு 5,000 இடங்களும் ஒதுக்கப்படும். இதன் மூலம் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மேலும் வலுவடையும்.
மத்திய அரசின் மூன்றாம் கட்டத் திட்டத்தின் கீழ் இந்தக் கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இவை 2025-26ஆம் ஆண்டு முதல் 2028-29ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அவர் கூறினார்.
ஒவ்வோர் இடத்திற்கும் தலா ரூ.1.50 கோடி செலவிடப்படும். இந்த நிதியைக் கொண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், நவீன ஆய்வகங்கள், மருத்துவக் கருவிகள் போன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட மருத்துவக் கல்வி, ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

