ரஷ்யாவிடமிருந்து ரூ.10,000 கோடியில் 288 ‘எஸ்-400’ ஏவுகணைகளை வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடமிருந்து ரூ.10,000 கோடியில் 288 ‘எஸ்-400’ ஏவுகணைகளை வாங்கும் இந்தியா

2 mins read
ec5031b5-1dfe-4148-8879-9b8206fdd395
ரஷ்யாவிடமிருந்து ரூ.10,000 கோடியில் 288 ‘எஸ்-400’ ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவின் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்யாவிடமிருந்து 10,000 கோடி ரூபாய் மதிப்பில் 288 ‘எஸ்-400’ (S-400) ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது.

இதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, ஆதம்பூர், புஜ் ஆகிய எல்லைப் பகுதிகளில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டன. அப்போது பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 314 கி.மீ. தொலைவில் வந்த போர் விமானங்களை இந்த ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன.

மேலும், எஸ்-400, ‘பன்ட்ஸிர்’ ஏவுகணைகள் இணைந்து வழங்கிய இரட்டை அடுக்கு வான் பாதுகாப்பு, பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள், தற்கொலைப்படை ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்திச் சாதனை படைத்தன.

இந்த ஏவுகணைகளின் துல்லியமான செயல்பாடு, போர்க்களத் திறன் காரணமாக, இவை அதிக அளவில் தேவை எனப் பாதுகாப்புப் படைகள் விருப்பம் தெரிவித்திருந்தன. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சில், தற்போது 288 ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, எஞ்சியுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணைத் தொகுப்புகள் வரும் ஜூன், நவம்பர் மாதங்களில் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 3.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்