புதுடெல்லி: ரூ.3,030 கோடி செலவில் மூன்று புதிய வேதிப்பொருள் பூங்காக்களை அமைப்பதற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்திய வேதித் தொழில்துறை மேம்பாட்டுக்கான ‘பவ்யா ரசாயன்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
இத்திட்டம் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் மூன்று முக்கிய வேதிப் பூங்காக்களும் தலா 2,000 ஏக்கர் பரப்பளவில் அமையும்.
மருந்துப் பொருள்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் பயன்படும் வேதிப்பொருள்கள், பெட்ரோலிய வேதிப்பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க இத்திட்டம் வழிவகுக்கும்.
உலகளவில் இந்திய வேதித் தொழில்துறையின் போட்டித்தன்மையை அதிகரிப்பதும் உள்நாட்டு மூலப்பொருள்கள் உற்பத்தியை உயர்த்துவதும் இதன் முக்கிய நோக்கங்கள்.
இந்தப் பூங்காக்களில் தொழில்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள், சிறந்த நீர் விநியோக அமைப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

