வெள்ளி இறக்குமதிக்கு இந்திய அரசு திடீர் கட்டுப்பாடு; வர்த்தகர்கள் அதிர்ச்சி

வெள்ளி இறக்குமதிக்கு இந்திய அரசு திடீர் கட்டுப்பாடு; வர்த்தகர்கள் அதிர்ச்சி

2 mins read
விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிப்பு
a72abd86-bd26-47e1-8dc2-b3ccf3f26e67
இனிமேல் வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய அரசின் முறையான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - படம்: ஜிவா.கோ

புதுடெல்லி: இந்தியாவில் தங்கம், வெள்ளிப் பொருள்களுக்கான தேவை எப்போதும் குறைவதில்லை.

இந்நிலையில், உள்நாட்டில் வெள்ளியின் இறக்குமதி அசுர வேகத்தில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதன் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஏற்கெனவே, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைக் காக்கும் நோக்கத்துடன் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய நிதி அமைச்சு ஆறு விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக உயர்த்தியது.

அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவின் டாலர் கையிருப்பு சரிந்து வருகிறது.

இதனை ஈடுகட்டும் வகையில் அத்தியாவசியமற்ற இறக்குமதியாகக் கருதப்படும் தங்கம், வெள்ளிக்கான வரி அண்மையில் உயர்த்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது வெள்ளி இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய வர்த்தக அமைச்சு அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இதுவரை எவ்விதத் தடையும் இன்றி ‘தடையற்ற பிரிவில்’ இருந்த 99.9 விழுக்காடு தூய்மையான வெள்ளிக்கட்டிகள் உடனடியாக ‘கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு’ மாற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இனிமேல் வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய அரசின் முறையான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுத் தேவையை உன்னிப்பாகக் கவனித்து, மிக அத்தியாவசியம் எனக் கருதினால் மட்டுமே அரசு இந்த உரிமத்தை வழங்கும்.

கடந்த நிதியாண்டில் வெள்ளியின் இறக்குமதி மதிப்பு இரண்டரை மடங்கு அதிகரித்து, ஏறக்குறைய 12.1 பில்லியன் டாலராக உயர்ந்ததே இந்தத் திடீர் கட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாகும்.

அளவின் அடிப்படையில் பார்த்தால், இது முந்தைய ஆண்டுகளைவிட 42 விழுக்காடு அதிகரித்து 7,335 டன்களாக எகிறியுள்ளது.

இந்த அசுர வளர்ச்சி நடப்பு ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்ததால் அரசு இந்த முட்டுக்கட்டையைப் போட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் உள்நாட்டில் வெள்ளிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு, வெள்ளி விலை மேலும் கிடுகிடுவென உயரக்கூடும் என்றும், இது நகைத் தொழிலில் ஈடுபடுபவர்களையும் வெள்ளிப் பொருள்களை அதிகம் பயன்படுத்தும் மின்னணுத் துறையினரையும் பெரிதும் பாதிக்கும் என்றும் வர்த்தக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்