புதுடெல்லி: இந்தியாவின் 12 பொதுத்துறை வங்கிகளை நான்காகக் குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஈராண்டுகளில் அத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள 12 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, வலுவான நிதிநிலை கொண்ட நான்கு பெரிய வங்கிகளாக மாற்ற நிதியமைச்சு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கிகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் உலகளவில் போட்டித் தன்மைமிக்க பெரிய வங்கிகளை உருவாக்கவும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான பெரிய கடன்களை வழங்கும் திறனுள்ளதாக அவற்றை மாற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கியும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவும் இணைந்த புதிய வங்கி என நான்கு வங்கிகள் மட்டுமே செயல்படும்.
இத்திட்டம் முதலில் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதல் வழங்கும்பட்சத்தில் மத்திய அமைச்சரவை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிடம் ஒப்புதல் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


