புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இந்தியப் பிரதமர் மோடியையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் தொடர்புப்படுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
அவருடைய இந்தப் பேச்சுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு அமெரிக்க அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி பேசிய ராகுல் காந்தி, “அண்மை காலமாக மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஒரு வேலை அவருக்கு ஞாபக மறதி வந்திருக்கக்கூடும். அமெரிக்க அதிபருக்குப் பின்னால் இருந்து ஒருவர் நினைவு படுத்திக்கொண்டே இருப்பார். ஏனென்றால், அமெரிக்க அதிபர் தனது ஞாபகத் திறனை இழந்துவிட்டார். அதேபோல நமது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார்,” எனக் கூறினார்.
“நீண்ட கால ஒற்றுமை, விடாமுயற்சி, பரஸ்பர மரியாதை ஆகியவை மூலம் கட்டமைக்கப்பட்ட பன்முக பங்காளித்துவத்தை அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ளது. இச்சூழலில் இதுபோன்ற பேச்சுகள் அல்லது அறிக்கைகள் வருவது துரதிருஷ்டவசமானது. ராகுலின் இந்தப் பேச்சு இருநாடுகளுக்கு இடையிலான அன்பு, நட்புறவுடன் ஒத்துப்போகவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை,” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

