கோவை: அமெரிக்காவின் 50 விழுக்காடு வரி விதிப்பை சமாளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம், 40 வெளிநாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதனால் ஒரு சில வாரங்களில் ஏற்றுமதியாளர்களின் நெருக்கடி தீர்ந்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளிநாடு சென்று புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஏமாற்றுகிறார். அவர் ஜெர்மனி செல்ல வேண்டிய தேவை என்ன என்றும் அண்ணாமலை கேட்டுள்ளார்.
“காவல்துறை அதிகாரி சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெறப்போகிறார் எனத் தெரிந்தும், புதிய டி.ஜி.பி.யை நியமிக்காமல் தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார். எட்டு மூத்த அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பு டி.ஜி.பி. பதவியேற்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. “பொறுப்பு டி.ஜி.பி. என்பதே ஒரு சட்டத்துக்கு புறம்பான விஷயம். உடனடியாக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கு எதிரான காவல்துறை அதிகாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்,” என்று திரு அண்ணாமலை சாடினார்.
“தொழில் முதலீடுகளை ஏற்க மத்திய அரசு உள்ளது. வெளிநாடு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார் என்பதற்கான வெள்ளை அறிக்கை வேண்டும். அமெரிக்காவின் ஐம்பது விழுக்காட்டு வரி விதிப்பினால் பாதிப்புதான். ஆனால், அதைச் சரிசெய்ய மத்திய அரசு 40 வெளிநாடுகளுடன் ஏற்றுமதியைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது,” என்றார் அண்ணாமலை.

