மத்தியச் செயலக நூலக இடமாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்தியச் செயலக நூலக இடமாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

படம்: இந்து தமிழ் திசை

06 Oct 2026 - 3:19 pm

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் செயல்பட்டு வரும் 135 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க மத்தியச் செயலக நூலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக, அதன் முழு விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய இந்திய அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் இந்தப் பழைமையான நூலகத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. அப்போது, புதிய திட்டத்தின்கீழ் நூலகத்திற்காக ஒதுக்கப்படும் இடம், அதன் தள அமைப்புத் திட்டம், இதர வசதிகள் குறித்த முழுமையான விவரங்களை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தில் தற்போது பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஏறக்குறைய இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அரிய நூல்கள், ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்குப் புதிய இடத்தில் போதிய வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்